Village School Science Exhibition கிராமத்தில் ஒரு அறிவியல் கண்காட்சி


கிராமத்தில் ஒரு அறிவியல் கண்காட்சி

ஒரு தகவல் சமீபத்தில் வியப்பில் ஆழ்த்தியது.

மலை வாழ் மக்கள் அதிகம் வாழும் ஒரு கிராமத்தில் அறிவியல் கண்காட்சி நடக்கிறது. அதுவும் கடந்த ஒன்பது வருடங்களாக தொடர்ந்து நடை பெற்று வருகிறது.  என்ன ? எங்கே ? எப்படி ? யார் பார்க்க வருவார்கள் என்று அடுக்கடுக்காக கேள்வி வந்தது.

நேரில் சென்று தகவலை உறுதி செய்வோம் என்று திருவண்ணாமலை மாவட்டத்தின் கடைக்கோடியில் தர்மபுரி மாவட்டத்தின் எல்லை அருகே குபேர பட்டினத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு 9-3-2020 சென்றோம்.


50 அறிவியல் தத்துவங்களை விளக்கும் எளிமையாய் சிறிய குழந்தைகளும் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் வரிசையாக காட்சிபடுத்தியிருந்தனர்.
ஒவ்வொரு தத்துவத்தையும் விளக்க ஒவ்வொரு மாணவர் ஓன்றாம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு மாணவர் வரை தயாராக இருந்தனர்.

“காற்றால் எடையை தூக்க முடியுமா ?” என்று வினவினாள் ஒரு மாணவி
“முடியாது “ என்றவுடன் வாயால் ஒரு குழாயில் ஊதினாள், அந்த காற்று ஒரு அட்டையின் மீது இருக்கும் எடையை உயர்த்தியது. “அருமை” என்று பாராட்டிவிட்டு, “ இந்தத் தத்துவத்தை நிகழ்கால வாழக்கையில் பயன்படுத்துகிறார்களா ? “ என்று கேட்டோம். நமக்கு மாணவர்கள் வெறுமனே ஒப்பிக்கிறார்களா அல்லது புரிந்துக் கொண்டு தான் சொல்லுகிறார்களா என்று குடைந்தது நமது மூளை.  அதற்கு அந்த 4ம் வகுப்பு மாணவி “ எல்லா வண்டிகளிலும் உள்ள டயர்கள் இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே எடை தூக்கி செல்கின்றன “ என்று நமது சந்தேகத்தை சுக்கு நூறாக்கினாள்.





10 நிமிடத்தில் பார்த்து விட்டு வந்து விடலாம் என்று நினைத்து சென்ற நம்மை சுமார் 2 மணி நேரம் வியப்பில் ஆழ்த்தினர் மாணவமணிகள்.
வருடா வருடம் டாக்டர் சி.வி. ராமன் அவர்கள் “ராமன் ஒளிக்கோட்பாடு” உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பிபரவரி 28 முதல் மார்ச் 10ம் தேதி வரை கடந்த ஒன்பது வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும்  இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.

ஒரு மாணவன் விஞ்ஞானி போல் உடை அணிந்து “ நான் தான் சர். சி.வி. ராமன் “ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரின் அறிவியல் பங்களிப்பை சிறப்பாக விவரித்தான்.

அங்கே பல விஞ்ஞானிகளின் புகைப்படங்கள் இருந்தன.  நமக்கு தெரிந்து பல பெரியவரக்ளுக்கே அதிகம் பரிச்சியமில்லாத விஞ்ஞானி திரு. ஜெகதீஷ் சந்திர போஸின் புகைபடத்தை காண்பித்து இவர் யார் என்றோம் . உடனடியாக ஒரு ஆறாம் வகுப்பு மாணவி “ இவர் தான் திரு. ஜெகதீஷ் சந்திர போஸ். இவர் தான் தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதென்று நிருப்பித்தவர். அதற்கான கருவிகளையும் கண்டுபிடித்தவர் “.  நாம் வழக்கப் போல் அரசு பள்ளி தானே என்று எண்ணிய அலட்சிய எண்ணங்களுக்கு நெத்தியில் அடித்தாற் போல் பதில் வந்தது.

இது எப்படி சாத்தியம் ? இந்த பகுதியில் பெற்றோர் பலரும் பள்ளி கல்லூரியில் படித்தவர்களா ??  இந்த மாணவர்களுக்கு மட்டும் எப்படி ஒரு ஆர்வம் விவரம்  தெரிந்து கொள்ள ? என்று மனதில் எண்ணம் ஒடியது.   அதற்கு அந்த பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள சில பெற்றோரிடமும் பேசினோம்.  அவர்கள் சொன்ன பதில் மேலும் வியப்பில் ஆழ்த்தியது.  இது திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய பகுதியென்றும் அதிகபட்சமாக மலை ஜாதி மக்களே வாழ்கிறோம்.  பெற்றோர்களாகிய எங்களுக்கு அதிகம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.  அதனால் எங்களுக்கு எங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் , அதனாலேயே இந்த பள்ளியில் சேர்த்துள்ளோம் என்றனர்.

இங்கு சுற்றி வர பல தனியார் பள்ளிகள் இருந்தும், அவைகள் பேருந்துகள் அனுப்பி மாணவர்களை அழைத்து சென்று வர இருக்கும் போது ஏன் இந்த அரசு பள்ளியில் சேர்க்கிறீர்கள் என்றதும் தனியார் பள்ளிகளை காட்டிலும் தரமான கல்வி, ஒழுக்கம் மற்றும் யோகா, பேச்சுதிறன் என்ற பல தகுதிகளையும் எங்கள் பிள்ளைகளால் இங்கேயே பெற முடியும், அதற்கு அரசாங்கமும் எல்லா செலவுகளையும் ஏற்கும் போது நாங்கள் ஏன் தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று பதில் கேள்வி எழுப்பினர். இந்த கிராமத்தில் 8 குழந்தைகள் தான் தனியார் பள்ளிகூடங்களுக்கு செல்கின்றனர்.  மொத்தம் 225 குழந்தைகள் இன்று இந்த பள்ளியில் படிக்கின்றனர்.

"இந்த தரமான கல்விக்கு கல்வி கடவுளின் பெயருடைய திருமதி. சரஸ்வதி அம்மா தான் காரணம். அதனால் அவரே விரும்பினாலும் அவரை இந்த ஊரை விட்டு போக அனுமதிக்க மாட்டோம்" என்றனர்.

மிகுந்த ஆச்சரியத்துடன் தலைமை ஆசிரியர் திருமதி. சரஸ்வதி அவர்களை சந்தித்து ஒரு பொறுப்பான தலைமை பண்பிற்காக வாழ்த்து சொன்னோம்.  அவர் அரசு  நிர்வாகம் தனக்கு அளித்துள்ள பொறுப்பினை தான் முழு மனத் திருப்தியுடன் செய்து வருவதாக சொன்னார்.  தான் மட்டுமல்ல இங்கு பணிபுரியும் ஒவ்வொரு ஆசிரியரும் காரணம் என்று பள்ளிக் கூட ஆசிரியர்களை அறிமுகப்படுத்தினார்.  அறிவியல் ஆசிரியர் திருமதி. கல்பனா மிகுந்த உற்சாகத்துடன் தான் மாணவர்களை கண்காட்சிக்கு தயார் செய்யும் முறைகளை விவரித்தார்.  அவர் ஒரு மாற்று திறனாளியாக இருக்கும் சூழ்நிலையிலும் மாணவர்களின் முன்னேற்றமே தனக்கு முக்கியம் என்று தன் நடவடிக்கையினால் நிருபிக்கிறார்.


நமது மலைகள் தோறும் மரங்கள் திட்டத்தினை பற்றி மாணவர்களிடம் பேச வேண்டும் என்றனர். 

மாணவர்களிடம் ஆத்திச்சூடி தெரியுமா என்றதும் “ அறம் செய்ய விரும்பு” என்று ஆரம்பித்து 109 செய்யுளையும் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

மாணவர்களுக்கு நாம் “அறம்” என்ற சொல்லினை “மரம்”  என்று மாற்றிக் கொள்ளுங்கள் . மரம் வைத்தலே மிக பெரிய அறம் என்றோம்.  “மரம் நடுவீர்களா??” எல்லோரும் ஒருமித்த குரலில் நடுவோம் என்றனர்.

உலகத்தின் மூத்த மலை எது ? என்று கேட்டுவிட்டு உங்கள் மாவட்டத்தின் பெயர் என்ன என்று கேட்டோம் ? உடனே “திருவண்ணாமலை” என்றனர். இரண்டு  கேள்விக்கும் ஒரே பதில் .

“ உலகத்தின் மலைகளுக்கெல்லாம் மூத்த மலை, முதல் எரிமலை, நெருப்பே குளிர்ந்து உண்டான திருமலை, மலைகளுக்கெல்லாம் அண்ணன் மலை – திருவண்ணாமலை.

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்றனர் ஆன்றோர். அப்படிப்பட்ட ஊரில் பிறந்தவங்க எவ்வளவு புண்ணியம் செஞ்சுருக்கணும்.  அதிலயும் மலைகள் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில பிறந்து பள்ளிக்கூடத்தில படிக்க ரொம்ப குடுத்து வைச்சிருக்கணும்.  அதுக்கும் மேல உங்கள் வாழக்கை முன்னேற்றித்திற்காக தங்களையே முழுமையாய் அர்பணிக்கும் ஆசிரியர் கிடைக்க, அவங்களும் வேறெங்கேயும் மாற்றம் கூட வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து ஒன்பது வருசாம அறிவியல் கண்காட்சி நடத்தறாங்கன்னா இந்த ஆசிரியர்களுக்கு நீங்கெல்லாம் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.  நன்றி சொல்வோமா ???” என்றதும் மாணவ செலவங்கள் அனைவரும் எழுந்து கரவொலி செய்து  நன்றி தெரிவித்தனர்.

“ இதே போல் நாம எல்லோருக்கும் வாழ தகுதியான ஒரு இடத்தை அளித்த இயற்கைக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டும்.  இதுவும் உங்கள் பிஞ்சு கரங்களால் செய்ய முடியும்.  ஆளுக்கொரு ஒரு ஆலமரம் வளர்த்து தாங்க. ஆல மரங்கள வளர்க்கிறது மிகவும் எளிமையானது. அதன் பழங்களை போட்டாலும் வளரும், மரத்தின் கிளைகளை வெட்டி நட்டு வளர்த்தாலும் வளரும்.  ஒரு சிமென்ட் பையிலோ இல்ல அரிசி பையிலோ கொஞ்சம் மண்ணும் கொஞ்சம் மாட்டுச் சாண உரமும் போட்டு ஒரு கிளையை வெட்டி நட்டுட்டீங்கன்னா ஒரு 45 நாள்ல ஒரு 10 அடி உயர மரக் கன்று கிடைத்து விடும். அந்த போத்து மரத்தை நல்ல மழை காலத்துல மலைகள் மேல நட்டுட்டோம்னா அது நன்றாக வளர்ந்து அந்த மலையை குளுமை படுத்திவிடும். 

மலை குளிர குளிர அது மேகங்களை இழுக்க ஆரம்பிச்சுடும்.  இந்த மேகங்கள் எங்கேயிருந்து வருகிறது தெரியுமா ? என்றதும் பல வாண்டுகள் எழ்ந்து “கடலில் இருந்து” என்று வழக்கமான உற்சாகத்தில் குரல் கொடுத்தனர்.

“ கரெக்ட், கடலில் தண்ணீர் ஆவியாகி, அந்த நீராவி வானத்தில் மேகமாகி காற்றில் மிதந்து வந்து வழியில் எந்த இடத்தில் குளுமை அதிகமாக இருக்கிறதோ அங்கு மழையாக இறங்கி, ஓடையாகி, ஆறாகி, மீண்டும் சென்று கடலில் கலக்கிறது. 

நம்ம தமிழ் நாட்டில மிக சில மாவட்டங்களுக்கு மட்டுமே இயற்கை அளித்திருக்கும்  மாபெரும் கொடை மலை. அதுவும் திருவண்ணாமலைன்னு மாவட்டத்தின் பெயரிலேயே மலை இருக்கிறதால இங்கு தான் அதிகமாக மலை குன்றுகள் மற்றும் மலை தொடர்கள் இருக்கிறது. ஆனால் கோடை காலம் ஆரம்பிச்சுட்டா வானிலை அறிக்கைல என்ன படிக்கிறாங்க, மிக அதிக பட்ச வெப்பநிலை பதிவாகும் இடமா இருக்கிறது வேலூர் மற்றும் திருவண்ணாமலை தான்.  ஏன்னா இந்த இரண்டு மாவட்டத்திலும் இருக்கும் மலை குன்றுகள் எல்லாம் மொட்டையாக மரங்களில்லாம காணப்படுகிறது.

அதனால தான் நாங்க “பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்திலிருந்து “ முதல் கட்டமா இந்த திருவண்ணாமலை மாவட்டத்தில இருக்கிற மலைகள் சுற்றியிருக்கிற கிராமங்கள தேர்ந்தெடுத்து அங்கிருக்கும் பள்ளி மாணவர்கள சந்திச்சு மலைகள் தோறும் மரங்கள் வைக்க வேண்டியதின் அவசியத்தையும் மாணவர்கள் மூலமா மரம் வளர்க்க பயிற்சியும் அளிச்சுட்டு வரோம்.

நாமெல்லாரும் மரம் வளர்க்க ஆரம்பிச்சு இந்த மலையெங்கும் மரம் வளர்ந்த்துட்டா இந்த ஊரெல்லாம் எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க . நமக்கெல்லாம் இந்த மாசங்கள்ல கூட குளிரெடுக்கும்  அப்பறம் ஊட்டி மாதிரி நாமளும் ஸ்வெட்டர் மாட்டிகிட்டுதான் பள்ளிக்கு வருவோம்.  நம்ம் மாவட்டம் தண்ணீர் மிகு மாவட்டம் ஆகிவிடும். விவசாயம் செழிக்கும் . யாரும் கிராமத்த விட்டு வெளியில ஊர்ல, வெளி நாட்டில போய் வேலை செய்யனும்னு அவசியம் இல்லை. 

“உங்கள்ல எவ்வளவு பேர் விவ்சாயி ஆகப் போறிங்க??? “ என்றதும் பல குழந்தைகள் உற்சாகமா கையை தூக்கினார்கள்.

“ ரொம்ப சந்தோஷம். இந்த மாதிரி கிராமங்களில் விவசாயம் செழிச்சாதான் நாடு வளம் பெறும் நாடு வளம் பெற்றால் தான் ஒரு பொறுப்புள்ள சமுதாயத்தை நம்மால் வளர்க்க முடியும் “ என்று கூறி நமது உரையை முடித்ததும் அனைத்து குழந்தைகளும் எழுந்து நமக்கு “வாழ்க வளமுடன்” என்று வாழ்த்து தெரிவித்தனர். நமக்கு இது மேலும் ஆச்சரியத்தை உண்டாக்கியது.  அதற்கு விளக்கம்  அளித்த தலைமை ஆசிரியர் தான் யோகாவில் பட்டய படிப்பு முடித்திருப்பதால் மாணவர்களுக்கு யோகாவையும் கற்பிப்பதாக சொன்னார்.


இந்த பள்ளிகூடத்திற்கு தான் எத்தனை இல்லைகள் :
1.     போதுமான கட்டுமான வசதிகள் இல்லை.
school entry point between two hotels

2.     சாலை வசதிகள் இல்லை
3.     உயர் நிலை பள்ளி ஆக்குவதற்கு நிலமும் இல்லை.
4.     ஆசிரியர்கள் வந்து செல்ல போதுமான பேருந்து வசதிகள்  கூட இந்த பகுதிக்கு இல்லை. தலைமை ஆசிரியர் தினமும் 50 +50  = 100 கி. மீட்டர் திருவண்ணாமலை நகரத்திலிருந்து வந்து செல்கிறார்.
5.     பள்ளி மாவட்டத்தின் கடை கோடியில் இருக்கிறது.

s    சாதனைகள் :

ஆனால் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை கூடி வருகிறது.
இவர்கள் அறிவியல் கண்காட்சி வருடாவருடம் நடத்த வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை ஆனால் உற்சாகமாக நடத்தி வருகிறார்கள். 

இவ்வளவு இல்லைகள் தாண்டியும் இந்த பள்ளிக் கூடத்தில் மட்டும் சாதனை செய்யும் அளவிற்கு வாய்ப்புகள் இருப்பதற்கு முக்கிய காரணம் மிக பொறுப்புள்ள ஆசிரியர்கள். அதுவும் தலைமை பதவியில் பொறுப்புள்ள ஒருவர் அமர்ந்துவிட்டால் அங்கு நன்மை நடந்தே தீரும்.

இதுவே நமது மக்களின் குடியரசு தலைவர் திரு. அப்துல் கலாம் அய்யாவின் 2020 கனவு.  அவர் எப்போதும் வலியுறுத்தியது போல் ஒரு நல்ல ஆசிரியர் இருந்துவிட்டால் பல நூறு அப்துல் கலாம்கள் , சி வி ராமன்கள், ராமானுஜங்களை, நம்மாழ்வார்களை நம்மால் உருவாக்க முடியும்.

அவர் கனவு குபேரபட்டினம் போன்ற அரசு பள்ளிகளால் சாத்தியமாகி வருகிறது. மிக பொறுப்புள்ள சமுதாயம் அமைந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்தது.

மத்திய அரசின் "அடல் டிங்கேரிங் லேப் " திட்டத்தில் இந்த பள்ளிக் கூட்டத்தில் ஒரு  ஆராய்ச்சி கூடம் அமைய பெற்றால் , மிகவும் பின் தங்கிய ஒரு மாவட்டத்தில் பின்  தங்கிய  பகுதியிலிருந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய  குடியிருப்பில் ஒரு விஞ்ஞானியை உருவாக ஒரு வாய்ப்பாக அமையும் . இந்த  திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு தலைமை ஆசிரியரிடம் நாம்  ஆலோசனை வழங்கியுள்ளோம்.

நடக்காது , முடியாது , வசதிகள்  குறைபாடு என்று அங்கலாயக்காமல் இருப்பதை கொண்டும் முன்னேற முடியும் என்பதற்கு குபேர பட்டினம் நடுநிலைப் பள்ளி ஒரு நல்ல  உதாரணம் .

முத்தாய்ப்பாக பேச்சு முடித்துக் கொண்டு கிளம்பும் போது ஒரு மாணவன் ஒடி வந்தான் “ சார் ! எனக்கு ஆலம் பழங்கள் தர்ரீங்களா” ன்னு கேட்டான்        “ எதுக்குப்பா ?” என்றதும் “ நான் உங்களுக்கு மரங்கள் வளர்த்து தரேன் . நீங்க மலைல போய் நடுங்க" என்று அந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் சொன்னார்.  

நாம் போட்ட விதை இவ்வளவு விரைவாக முளைக்கும் என்று நாமே நினைக்கவில்லை.

குபேரபட்டினத்தில் பல விஞ்ஞானிகளும் விவசாயிகளும் வளர்ந்து வருகிறார்கள் என்ற நம்பிக்கை திடமாக  இருக்கிறது.

வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.





Comments

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students