Ramana Maharishi Nammazhwar
இந்த மாபெரும் பிரபஞ்சம் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உயர் பிரபஞ்ச ஞான நிலையை அடைய பல்வேறு வழிக்காட்டிகளை அனுப்பிய வண்ணம் இருக்கிறது.
இந்த உலகில் பல்வேறு உயிரினங்களும் ஆனந்த நிலையில் வாழ சதா முயன்று வருகின்றன. அதற்கு ஒவ்வொரு உயிருக்கும் பல சூழ்நிலைகளில் வழிக் காட்ட சில வழிக் காட்டி உயிரினங்களை இயற்கை அனுப்பி கொண்டிருக்கிறது.
டிசம்பருடன் தொடர்புடைய இரண்டு மாபெரும் வழிக்காட்டிகளை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் போற்றி பணிகிறது.
மண்ணை நெகிழ வைக்கும் விஞ்ஞானத்தை அன்புடன் ஊட்டி அதன் மெய் ஞானத்தை உலகோர்க்கு வழிக்காட்டியவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா. அவர் மண்ணில் விதையாகி ( 30/31-12-2013 ) இன்றோடு 8 ஆண்டுகள் ஆகின்றது.
மனதை நெகிழச்செய்து இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் மாறா அன்பை வாழ்ந்து காட்டி வழிக் காட்டியவர் இரமண மகரிஷி.
விவசாயமும் ஆன்மீகமும் இரண்டு வெவ்வேறு பாதைகள் போல் தோன்றினாலும் விவசாயமும் ஒரு மெய் ஞான அனுபவமே. திரு இரமண மகரிஷி போதித்த அனைத்து உயிர் ஆராதனைகளையும் தினம் தினம் தன் வயலில் நிகழ்த்தி நிகழ காண்பவர் விவசாயி.
ஒவ்வொரு நாளும் விதையின் பிறப்பு கதிரின் இறப்புகளை நேரடியாக களத்தில் கண்டு மனம் பக்குவபடுதலில் தான் விவாசயிகளுக்கு அனுபவ பாடம் தரப்படுகிறது. வேறெந்த துறையினரை காட்டிலும் இயற்கையின் பல்வேறு பரிமாணங்களை மிக அருகில் உன்னிப்பாக பார்க்க கூடிய உணரக் கூடிய வாய்ப்புகள் விவசாயிக்கு இயற்கை அள்ளித் தருகிறது.
வயலில் காணக் கூடிய மண் புழுக்கள், பட்டாம் பூச்சிகள், சிலந்திகள், பறவைகள், மிருகங்கள், பலவித மண் வகைகள், பருவ நிலைகள், நீர் ஆதாரங்கள் என்று இயற்கை வாழ்வியலின் உன்னத பல்கலைக்கழகம் விவசாய நிலமே. ஆனால் இன்றைக்கு பெரும்பாலான விவசாயிகளின் வாழ்க்கையில் பொருளாதார தாக்கம் பெருமளவு ஏற்பட்டு பணத்திற்காக மட்டும் விவசாயம் என்ற சூழலில் தள்ளப்பட்டு அரசாங்கம், அரசியல், வாணிபம், மருத்துவம் என்ற பல்வேறு சிறைகளில் தள்ளப்பட்டு பல இரசாயனங்களையும் கொட்டி வியர்வை பல சிந்தியும் ஒரு விரக்தியான வாழ்க்கையினை , எதற்கு வாழ்கிறோம் என்று புரியாத மாய சிலந்தி வலையில் சிக்கி சின்னாபின்னமாக வாழ்கின்றனர்.
உணவு படைக்கும் விவசாயி குழப்பமான சூழ்நிலையில் இருப்பதால் அவர்களால் உற்பத்தி செய்யப்படும் உணவை உண்பவர்களும் பல மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றனர். உணவை சமைப்பவரின் மனநிலையே உணவை பாதிக்கும் என்றால் உணவைவிளைவிக்கும் விவசாயியின் மனநிலை எந்தளவிற்கு சமுதாயத்தை பாதிக்கும் என்று பொறுப்புடன் நாம் சிந்திக்க வேண்டும்.
இந்த இடத்தில் தான் ஆன்மீக வழி அவசியமாகிறது. சிலரை இந்த பிரபஞ்சம் , இயற்கை மற்றவர்களுக்காக வாழ்வதற்காகவே படைக்கிறது. அதில் வள்ளுவரின் கூற்றுப் படி "உழவே தலை".
அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகளின் கூற்றுபடி " வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றார். இப்படி தினம் தினம் பயிர் வாடும் போதெல்லாம் வாடுபவர் விவசாயி மட்டுமே. வாடும் வயிறுக்காக உணவளிக்கும் ஒவ்வொரு விவசாயியும் ஒரு வள்ளலாரே. ஆகையினால் இந்த வள்ளல்கள் எத்தனை கணக்கு பார்த்தாலும் கல்லா நிறைய மாட்டேன் என்கிறது. விவசாயிகள் மிகுந்த அன்பொடு பொறுப்பாக இயற்கை வழியில் உணவை உற்பத்தி செய்தால் மட்டுமே சமுதாயம் நோய் நொடியின்றி , ஆரோக்கியமாக , நல்ல எண்ணங்களோடு வாழ முடியும். விவசாயிகள் நலமோடு வாழ சமுதாயமும் நேரடியாக விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ப அவர்களுக்கு உரிய பொருளாதார வளர்ச்சி கிடைக்க விவசாயிகளோடு நேரடியாக தொடர்பு கொண்டு தரமான உணவினை பெற்று மகிழ்வோடு வாழ வேண்டும்.
சமுதாயத்தில் கொலை, குற்றம், போர் இன்ன பிற வேறுபாடுகள் அனைத்திற்குமே தரமில்லாத உணவு தான் அடிப்படை காரணம். இந்த அடிப்படை உயிர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விவசாயி நல்ல மன நிலையில் தரமான பயிர்களை உற்பத்தி செய்தால் மட்டுமே மிக ஆரோக்கியமாக அமைதியுடன் உலக மக்கள் அனைவரும் உள் ஆன்மீக மலர்ச்சி கண்டு உன்னதமாக வாழ முடியும்.
ஆன்மீக என்றதும் கோவில்களிலும், சர்ச்களிலும், மசூதிகளிலும் முண்டியடித்து கொண்டு கைத் தொழுவதோ விழுந்து எழுவதோ மட்டும் இல்லை.
நம்மை சுற்றியுள்ள இயற்கையின் பல உருவங்களான மலைகள், மரங்கள் , ஆறுகளை போற்றி கொண்டாடுவதுடன் அவற்றை தூய்மையாக பாதுகாப்பதே உண்மையான ஆன்மீகமாகும். இதனையே பண்டைய தமிழர்கள் மலையை ஒரு கடவுளாகவும், மரங்களை ஒரு கடவுளாகவும், ஆறுகளை இறையாகவும் ஆராதனை செய்ய விழாக்கள் எடுத்து மகிழ்ந்து பொறுப்புடன் வாழ்ந்தனர்.
இயற்கை இந்த இரு பெரும் ஞானியரையும் நம்மிடையே தோற்றுவித்ததும் அவர்களின் உருவத்தின் தோற்றம் மறைவையும் ஒரே நாளில் நடத்தியதையும் நாம் எல்லோருக்கும் பொறுப்புடன் இயற்கையை எப்படி போற்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே.
ஞானியரை போற்றுதல் அவர்களின் பிறந்த இறந்த தினங்களில் வாழ்த்துவது மட்டுமல்ல அவர்கள் போற்றிய இயற்கையுடன் ஒன்றிணைந்து ஆனந்தமாக வாழ்வோம். அனைத்து உயிர்களையும் நம்மை போல் இனிமையாக வாழ பொறுப்புடன் இடமளிப்போம். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்று உணர்வதே இரமண மகரிஷி, நம்மாழ்வார் அய்யா போன்ற மெய் ஞானியர் வாழ்ந்து காட்டி வழிக் காட்டிய வழியாகும்.
எள்ளிலிருந்து எண்ணை எடுக்க வழி சொன்னவரும் உள்ளிலிருந்து "என்னை" எடுக்க வழி சொன்னவரும் சொன்ன வழி ஒன்று தான். ஆதலினால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் காதலோடு விரும்பி செய்வோம்.
நம்மாழ்வார் அய்யா.
ReplyDeleteதிரு. இரமண மகரிஷி
அவர்களை போற்றுவோம், வணங்குவோம்
அற்புதமான கருத்து, ஆழமான சிந்தனை
நல்ல மாற்றத்தை எதிர்பார்போம்
நன்றி அய்யா. ஊக்கமுடன் வாழ்வோம்
DeleteBeautiful comparison between Ramanar and Nammazhvar. Both were concerned about all the beings in the world
ReplyDeleteYes very true
Deleteநல்ல கருத்துக்களை விதைக்கிறீர்கள். மரங்களாக வளரட்டும்.
ReplyDeleteநன்றி அய்யா
DeleteGood
ReplyDeletewelcome
Delete