Black Board Teaching is not education கரும்பலகையில் கற்பிப்பது கல்வி அல்ல

 


விவசாயக் குடும்பத்தில் பிறக்காதவர்கள் கூட இன்று விவசாயத்தில் ஈடுபட வைத்ததற்கு நம்மாழ்வார் அய்யாவின் ஆக்கபூரவமான ஊக்குவிப்பே முக்கிய காரணம். பல கிராமங்களுக்கு சென்று பல விவசாயிகளிடம் பேசி, பழகி அவர்களை இயற்கை வழி விவசாயத்தின் பால் மீண்டும் இட்டு வந்து இன்று இயற்கை வழி விவசாயம் இந்த அளவிற்கு வளர்வதற்கு அயராது கடைசி மூச்சு வரை பாடுபட்டார்.



அய்யாவின் முயற்சியால் தான் மாட்டு சாணத்திலிருந்தே இடு பொருள் தயாரிக்கும் அளவிற்கு பல விவசாயிகள் முன்னேறி உள்ளனர். சிவன் கோவில்களில் பக்தர்களின் உடல்நலத்திற்காக மட்டுமே வழங்கப்பட்ட பஞ்சகவ்யாவை விவசாயிகளிடம் பிரபலபடுத்தினார்.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணை , இறக்குமதி செய்த பாமாயில் என்று பழகிப் போன மக்களை மீண்டும் மரச் செக்கெண்ணை நோக்கி திருப்பி இன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் கூட வீதிக்கு வீதி மரச் செக்கு எண்ணையை வரவழைத்த புரட்சி செய்தவர். 

அவருடைய மறுமலர்ச்சி புரட்சி கருத்துக்களில் இன்னமும் நாம் பரவலாக கொண்டு சேர்க்க வேண்டியது, கல்வி பள்ளிக் கூடங்களில் மட்டுமே கிடைக்கும் என்று நம்பும் மூட பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளதே.
விவசாயியே பல்கலைகழகம்
இன்றளவும் பல விவசாயிகளும் தங்களுக்கு அடுத்த தலைமுறை தங்களைப் போல் உடல் உழைப்பால் சங்கடத்திற்கு ஆளாகாமல் கல்லூரி படிப்பு படித்து ஏதோ ஒரு நிறுவனத்தில் மாத சம்பளத்திற்காகவாவது சேர்ந்து சௌகரியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்புவதே.  ஒரு விவசாயி வீட்டில் வளரும் குழந்தை பிறந்ததில் இருந்தே பல பயிர்களை அடையாளம் காண, தானியங்களை பிரித்து எடுத்தல், விதை தூவுதல், நாற்று நடுதல் , களை எடுத்தல் , அண்டை வெட்டுதல் , பறவைகள் ,விலங்குகளின் நடமாட்டத்தை கவனித்தல், ஆடு மாடு, கோழி மேய்த்தல், சாணம் அள்ளுதல் போன்ற எண்ணற்ற தொழிற் கல்வியை வளரும் போதே கற்கிறோம் என்ற எந்த உணர்வும் இன்றி கற்பதே உண்மையான கல்வியாகும்.  இந்த கல்வியை பெற்றோரிடம் இருந்து கற்பதே மிக அற்புதமான வாழ்க்கை பேறாகும். ஆனால் விவசாயியும் சரி அவர்கள் மக்களும் இது தான் கல்வி என்று உணராமல் ஒரு பெரிய கட்டிடத்துள் நாலு சுவற்றிர்குள் கரும்பலகையில் யாரோ ஒருவர் எழுத அதை பார்த்து திரும்ப நோட்டு புத்தகத்தில் எழுதுவதே கல்வி என்ற தவறான புரிதலில் உள்ளோம். 

எது கல்வி ?
இன்றளவும் நகரங்களில் வளரும் பெரும்பாலான சிறுவர்களுக்கும், ஏன் சில பெரியவர்களுக்கும் கூட கடலை பருப்பிற்கும் துவரம் பருப்பிற்கும் வித்தியாசம் தெரியாது, ஆனால் ஒரு விவசாயி வீட்டில் வளரும் குழந்தைக்கு சிறு வயதிலேயே அனைத்து பயிர்களோடும் விளையாடும் வாய்ப்பு இருக்கும். காளை கன்றிற்கும் பெட்டை கன்றிற்கும் வித்தியாசம் தெரியும். இந்த களத்திலேயே கற்கும் கல்வியே வாழ்நாள் முழுவதும் நீடித்து நிற்கும். 

நம்மாழ்வார் அய்யாவின் இயற்கை விவசாயம் , வாழ்வியல் வகுப்புகளில் அவருடன் சம தளத்தில் அனைவரும் உட்கார்ந்து கொண்டு அவருடன் கலந்துரையாடுவது என்ற இரு வழி கருத்து பரிமாற்றம் நடைபெறும். அந்த வகுப்புகளில் யாரும் ஆசிரியர் அல்ல அனைவரும் அவர் உட்பட மாணவரே. கரும்பலகையை கொண்டு கற்பிக்கும் பொழுது அதில் எழுதும் ஆசிரியர் எல்லாம் தெரிந்த கற்பிப்பவராகவும் எதிரே இருக்கும் எதுவும் அறியாத மாணவர்கள் கற்பவர்களாக களம் உருவாகிறது. கரும்பலகை வகுப்பில் நாலு சுவர்களுக்குள் மாணவர்களின் அறிவு விரிவடைய வாய்ப்பு குறைவு. அதனால் தான் பெரும்பாலான மாணவர்களுக்கு பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றவுடன் ஒரு சோர்வு வருகிறது. சோர்வடைந்த மூளைக்குள் நல் அறிவு விரிவதில்லை. 

எது ஆனந்தம் ?
அய்யாவின் இந்த பிறந்த நாளின் நினைவாக ஒவ்வொரு விவசாயியும் எடுக்க வேண்டிய தீர்மானம் - விவசாயத்தை மிகவும் விரும்பி மிகவும் ஆரோக்கியமான தானியங்களை, பழங்களை, காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்து அவ்ற்றை ஆற அமர கொண்டாடி உண்டு ஆரோக்கியமாக வாழ பழக வேண்டும்

நகரங்களில் வாழும் மக்களின் நிலைமை - நல்ல காற்று இன்றி நல்ல தண்ணீர் இன்று ஆரோக்கியம் குன்றி வாழ்ந்து வருகிறார்கள். 
ஆனால் இந்த ஆரோக்கியமற்ற நகர (நரக ) வாழ்க்கையை நோக்கி தான் கிராம மக்கள் படையெடுக்கின்றனர்.  இந்த நிலை மாறி கிராம மக்கள் தரமான உணவினை உற்பத்தி செய்து மிக ஆரோக்கியமாக ஆனந்தமாக உண்டு உடுத்தி வாழ்ந்தால் தான் நகரத்தவர்களும் கிராமங்கள் நோக்கி நகர்வார்கள். இதற்கு கல்வி பற்றிய தெளிவு, வெட்டி ஜம்பத்திற்காக கடன் வாங்குதல், மருத்துவதற்கான வீண் செலவுகளை குறைத்தாலே விவசாயியின் வாழ்க்கை தரம் உயரும்.  ஒவ்வொரு விவசாயியும்  ஒரு பல்கலைகழகமாக மாறுவதே,  நம் பார்வை மாறுவதே நாம் அனைவருக்குள்ளும் விதை போட்ட அன்பே வடிவமான நம்மாழ்வார் அய்யாவின் பணியை நாமும் மேலும் தொடர்வதே சிறந்த வழியாகும். 

அறிவு வளர்ப்பதே கல்வியின் நோக்கம் என்றால் ஒவ்வொரு விவசாய நிலமுமே ஒரு சிறந்த திறந்த வெளி பள்ளிக்கூடம். காடுகளே பல்கலைகழகம் என்ற நிலை இந்த நாட்டில் தோன்றினால் அன்று தான் நம்மாழ்வார் அய்யா போட்ட விதை விஸ்வரூபமாக ஒரு மரமாக வளர்ந்து கனி கொடுத்து விட்டது என்று விளங்கி கொள்ளலாம்.  அந்த நிலை வரும் வரை தொடர்ந்து ஒரு பொறுப்புள்ள சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியை அவர் போட்ட பாதையில் தொடர்வோம்.

பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம்
'Responsible Citizens iYakkam April 2023



Comments

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

நம்மாழ்வார் தெரு- 5ம் ஆண்டு- இரண்டாம் நம்மாழ்வார்

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai