நம்ம ஆழ்வார்களை போற்றுவோம் Hail Nammazhwars

 

இன்று (30.12.2024) இயற்கை வழி வேளாண் விஞ்ஞானி தெய்த்திரு. நம்மாழ்வார் அய்யா அவர்களின் 11வது ஆண்டு நினைவு நாள். அய்யாவின் உருவம் தான் மறைந்ததே அன்றி அவரின் உணர்வு இன்று எண்ணற்ற இயற்கை வழி விவசாயம் செய்யும் பல உழவர்களிடம் ஊடுபாவாக நிறைந்தே காணப்படுகிறது.

கத்தியின்றி, இரத்தம் இன்றி ஒரு உண்மையான பசுமை புரட்சியை அய்யா பல்வேறு கிராமங்களுக்கும் நடந்து கூட சென்று பல நல்ல உள்ளங்களில் உள்ளொளியை ஏற்றி வைத்தார்கள். இன்று பல இளைஞர்களும் காணி நிலமாவது விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆர்வம் ஊட்டியவர் நம்மாழ்வார் அய்யா. 

அவரின் பெயரின் மூலக் காரணமான முதலாம் நம்மாழ்வாரையும் இன்னாளில் நினைவு கூறுவோம். ஆழ்வார்கள் அனைவரும் மார்கழி மாதத்தை பெருமாளை முழுவதுமாக வணங்குவதற்குரிய மாதாமாக என்றும் கொண்டாடியவர்கள். 

முதலாம் நம்மாழ்வாரும் இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் இறைவனை கண்ட ஒரு சிறந்த தத்துவ பேரறிஞர். அவர் என்றென்றும் தான் பெற்ற ஞானத்தை ஒரு புளிய மரத்தினடியில் அமர்ந்தே அருளினார்கள். மரத்தினடியே இயற்கையில் இறைமையில் லயிக்க, பிரபஞ்ச பேராற்றலை உணர ஒரு உன்னத தலமாக போற்றியவர். 

நம் கால நம்மாழ்வாரும் மரங்களை மிக உன்னதமான ஒரு உயிரினமாக கொண்டாடியவர். வேப்பம் மரத்திற்கு ஒரு அமெரிக்கர் காப்புரிமை பெற முனைந்த போது உலக நீதி மன்றம் வரை சென்று பல இயற்கை பாதுகாவலர்களுடன் இணைந்து பாரத பாரம்பரியத்திற்கும் மரங்களுடன் இருந்த ஆழமான மரபுகளை உலகத்திற்கு உரக்க உரைத்து வேப்ப மரத்தை காப்புரிமை சங்கிலியில்ருந்து மீட்டு அனைவரும் மீண்டும பயன் படுத்த உரிமையை நிலை நாட்டியவ்ர். இதே நாளில் ஜனவரி 1 ம் தேதி அய்யா 2014 மண்ணில் விதைக்க பட்ட போது அந்த இடத்தில் ஒரு வேப்ப மரம் நடப்பட வேண்டும் என்று தெரிவித்த விருப்பத்தின் படி அவர் சமாதியின் மீது வேப்ப மரம் நடப்பட்டது.

நம்மாழ்வார் அய்யா ஆண்டாள் இயற்றிய "திருப்பாவை"யில் உள்ள இயற்கை வழி விவசாயிகள் உண்ணிப்பாக கவனிக்க வேண்டிய இயற்கையின் பல அம்சங்களை விளக்கி உள்ளார்கள். வயலுக்கு எந்தெந்த பருவத்தில் எந்தெந்த உயிரினங்கள் எப்படி வருகையை உணர்த்தும் என்று ஆண்டாள் பாடல்களில் இயற்கை வழி விவசாயத்திற்கு உள்ள குறியீடுகளை பல முறை உணர்த்தியுள்ளார்கள்.

ஆழ்வார்கள் பெருமாளை "ஹரி" என்று அழைப்பார்கள். அதன் சொல்லின் பொருளே "பச்சை" "பசுமை" என்பதாகும். பெருமாளின்  உருவத்தை "பச்சை மா மலை போல்" மேனி என்று பாடியுள்ளார்கள். ஆயர் குல மாடு மேய்க்கும் சிறுவனும் "ஒரு விரலால் கோவர்த்தன மலையை" தூக்கி "இயற்கையை வழிபட வேண்டிய" அவசியத்தை உணர்த்துவதாகவே பாடியுள்ளார்கள். 


இயற்கை வாழ்வியலில் இயற்கையை போற்றுதல், அதன் தன்மையை கூர்ந்து கவனித்தல், அதன் அதிசய தன்மையை வணங்குதல் ஆகிய முக்கிய அம்சங்களை ஆழ்வார்கள் அதே இயற்கையின் அம்சங்களை பெருமாளின் அம்சங்களாக வர்ணிக்கிறார்கள். 

நம்மாழ்வார் அய்யா மண்ணில் விதைக்க பட்ட நன்னாளில் இயற்கையின் முக்கியமான அங்கங்களான மலை, மரம், இவை இரண்டும் உருவாக்கும் மழை என்னும் ஆறுகள் - இயற்கை வாழ்வியலுக்கும் இயற்கை வழி விவசாயத்திற்கும் நாம் பாதுகாத்து பராமரிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமக்களுக்கும் இருக்கிறது. 

இன்று தமிழ்நாட்டில் ஓடும் அனைத்து ஆறுகளிலும்  காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி என்ற எந்த ஆறிலும் தொழிற்சாலை கழிவுகள், சாக்கடை கழிவுகள் கலந்தே வருகின்றன. இதனால் நாம் குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று , உண்ணும் உணவு அனைத்திலும் விஷம் பல வடிவங்களில் கலந்தே உள்ளன. 

நம்மாழ்வார் அய்யா கூறிய படி, தமிழ் பாரம்பரியத்தில் கூறப்பட்டுள்ள பல ஆழ்வார்கள் பாடல்களிலும் குறிப்பிடபட்டுள்ள பருவ மழை காலம் அளவோடு பரவலாக செய்ய தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மலையிலும் அடர் வனம் உருவாக்கி அதில் நீரோடைகள் ஓடச் செய்து ஒவ்வொரு கிராமத்திலும் இயற்கை வழி விவசாயம் செய்யும் சூழலை உருவாக்க இந்த ஆங்கில புத்தாண்டு 2025 பிறந்த நேரத்தில் உறுதி எடுப்போம்.

இயற்கையை இறைமையாக போற்றிய நம் கால நம்மாழ்வாரையும் முதலாம் நம்மாழ்வார் முதல் 12 ஆழ்வார்களை போல் ஒரு ஆழ்வாராகவே போற்றி வணங்குவோம். அந்த ஆழ்வார்கள் பாடிய பாடல்களில் கூறி உள்ள இயற்கை சூழலை இந்த ஆழ்வார் உடல் நீத்த மார்கழி மாதத்தில் மீண்டும் கொண்டு வர உறுதி பூணுவோம். 


பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் 1ஜனவரி2025
Responsible Citizens iYakkam 1 January 2025


Comments

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students