Tree Man Sunderlal Bahuguna Chipko

         மரங்காவலர் சுந்தர்லால் பகுகுணா அய்யா


படம் வரைந்துள்ள ஒவியர் திரு சதிஷ் ஆச்சார்யாவிற்கு நன்றி

சிப்கோ இயக்க நிறுவனரும் சூழலியலாளருமான திரு. சுந்தர்லால் பகுகுணா  அய்யா இன்று 21.5.21 இயற்கேயோடு இரண்டற கலந்தார். மண்ணிற்கு உரமானார்.

சுந்தர்லால் பகுகுணா (1927-2021) காந்தியவாதியும் இந்தியாவின் ஆரம்பகால சூழியல் போராளிகளில் ஒருவரும் ஆவார். இமையமலைக் காடுகளைக் காக்கும் பொருட்டு சிப்கோ இயக்கத்தைத் துவங்கினார். கனிமச் சுரங்கங்களாலும் பெரிய அணைக்கட்டுக்களாலும் ஏற்படும் சூழியல் அழிவுகளை எதிராகப் பல போராட்டங்களை ஒருங்கிணைத்துள்ளார்.

இமையமலைக் காடுகள் வேகமாக வெட்டி அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலங்களில் காடுகளைப் பாதுகாக்கும்பொருட்டு சிப்கோ இயக்கம் துவங்கப்பட்டது. 1970களில் இமியமலைப் பகுதிகளில் வெள்ளமும் நிலச்சரிவுகளும் வழக்கத்தைவிட அதிக அளவில் நிகழ்ந்தன. காடழிப்பும் பெரிய கட்டுமானங்களுமே அவற்றுக்குக் காரணம் என மக்கள் நினைத்தனர். இந்நிலையில் 1974ம் வருடம் மார்ச் 24ம் தேதி ரேனி என்னும் கிராமத்தின் ஆண்கள் எல்லாரும் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக ஊரைவிட்டு சென்றிருந்தனர். அப்போது மரம் வெட்டுபவர்கள் வரவும் ரேனி கிராமத்தின் பெண்கள் மரங்களை கட்டியணைத்துக்கொண்டு மரங்களுக்காக உயிரையும் தர முன்வந்தனர். வேறுவழியின்றி மரம் வெட்டுபவர்களும் திரும்பிச் சென்றனர். இந்நிகழ்வு இந்தியா முழுவதும் சூழியல் போராட்டத்திற்கான பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. சிப்கோ என்னும் இந்திச் சொல்லின் பொருள் 'கட்டியணைத்தல்' என்பதாகும்.

இமய மலைகளின் நம்மாழ்வார் 

தன்னிச்சையாக ஆரம்பித்த இவ்வியக்கத்தின் தலைவர்களுள் ஒருவராக சுந்தர்லால் பகுகுணா செயல்பட்டார். இப்போராட்டத்திற்காக 'சூழல் இயலே நிரந்தர பொருளியல்' என்னும் முழக்கத்தை உருவாக்கினார். சிப்கோ போராட்டத்திற்காக மக்களிடம் ஆதரவைத் திரட்டவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுந்தர்லால் பகுகுணா 1981-82ல் காஷ்மீர் முதல் கோஹிமா வரை 4870 கிலோ மீட்டருக்கு இமையமலையில் உள்ள கிராமங்கள் தோறும் நடைபயணம் மேற்கொண்டார். இந்த நிலையில் இந்த இயக்கத்தை தோற்றுவிக்க காரணமாக இருந்த சுந்தர்லால் பகுகுணாவுக்கு, இந்திய அரசு, 1981-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுக்க முன்வந்தது. ஆனால் அவர் அதை வாங்க மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், ''இமய மலைப் பகுதியில் தினம் தினம் ஏராளமான மரங்கள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் மண் அரிப்பு ஏற்படுகிறது. பாரத மாதாவின் ரத்தமும் சதையுமாக நினைக்கிறோமே அந்த 'வளமான மண்’, கடலை நோக்கித் தினமும் போய்க்கொண்டு இருக்கிறது. அது என்று தடுக்கப்படுகிறதோ, அன்றுதான் விருது பெறுவதற்குரிய தகுதி எனக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்களிடம் ஆதரவு பெருகியதால் அப்போதைய பிரதமரான இந்திராகாந்தியைச் சந்திக்கும் வாய்ப்பு பெற்றார். அச்சந்திப்பின் மூலம் 15 ஆண்டுகளுக்கு மரங்களை வெட்டுவதற்கு மத்திய அரசு தடை விதித்தது.


வனப்பாதுகாப்புக்காக இயங்கிவரும் அமைப்புகளில், இந்தியாவின் அழுத்தமான இயக்கமாக சிப்கோ இயக்கம் இருப்பதற்கு அதன் உறுதித்தன்மை காரணம். அந்த உறுதித்தன்மைக்கு உதாரணமாக, ஒரு மரத்தை முன்னிட்டு பிஷ்னோய் மக்களுக்கு இழைக்கப்பட்ட பெருங்கொடுமை ஒன்றை உதாரணமாகச் சொல்லலாம்.

இராஜஸ்தான் ஏன் பாலைவனமானது  ???

கி.பி. 1730ல் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மன்னர் அஜய்சிங், தனது அலுவல் வசதிக்காக புதிதாக ஒரு அரண்மனையை மார்வார் என்ற வனப்பகுதியில் அமைக்க நினைத்தார். ஆனால் அந்த பகுதியில் இருந்த மரங்கள் அவரது விருப்பத்திற்கு தடையாக இருந்தது. அந்த மரங்களை வெட்ட தனது ஆட்களை அனுப்பினார்.

ஆனால் அந்த பகுதியில் வாழ்ந்து வந்த 'பிஷ்ணோய்' என்ற இன மக்கள் மரங்களை தெய்வமாக கருதி வாழ்ந்து வந்திருக்கின்றனர். மன்னரின் ஆணையை கேட்ட மக்கள் முடிந்தவரை தங்கள் எதிர்ப்பை தெரிவித்தும் பலன் அளிக்கவில்லை. மன்னரின் உத்தரவின் படி வீரர்கள் மரங்களை வெட்ட வந்தனர். மரங்களை வெட்டுவதற்கு முன்னர் தம்மை வீழ்த்தச் சொல்லிப் பெண்களும் குழந்தைகளும் மரங்களைக் கட்டிப்பிடித்துப் போராடினர்.


வீரர்களும் மன்னனின் உத்தரவை மீற முடியாமல், மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாயான அம்ரிதா தேவியையும் அவரின் குழந்தைகளையும் முதலில் வெட்டிச் சாய்த்தார்கள். இப்படியே 363 மரங்களையும் அதனை கட்டிப் பிடித்த மனிதர்களையும் வெட்டி சாய்த்தனர். அதன்பின்னர் மனம்இளகிய மன்னர் இந்த இடம் வேண்டாம் சொல்லி, போர்வீரர்களை திரும்பி வரச்சொல்லி உத்தரவிட்டார்.

இப்படிப்பட்ட போராட்டங்களை மீறி பல்வேறு அரசுகளும் காடுகளை அழிக்க முனைந்ததால் இன்று ராஜஸ்தானில் மிகப் பெரிய பாலைவனம் உருவாகிவிட்டது. இது போல் ஒரு காலத்தில் பெரும் காடுகளாக இருந்த அரேபியா இன்று சுட்டெரிக்கும் பாலைவனமாகிவிட்டது.



அதனால் மக்களாகிய நாம் பொறுப்புள்ள குடிமக்களாக, இருக்கும் காடுகளை பாதுகாத்து மேலும் பல்லாயிரம் கோடி மரங்களை நட்டு காடுகளை மீட்போம், இயற்கையோடு இணைந்து வளமோடு வாழ்வோம். 

போராடினால் தான் இயற்கை வளங்களை மீட்க முடியும் என்ற நிலையிலிருந்து அனைவரும் இயற்கை விரும்பி வணங்கும் வாழும் சூழலை உருவாக்குவோம்.

பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் சுந்தர்லால் பகுகுணா அய்யா மற்றும் அவரது இயக்கத்தினர் அனைவரின் இயற்கையின் மீது வைத்துள்ள அன்பினை வணங்குகிறது. 



Comments

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students