சென்னை வெள்ளம் சொல்லும் பாடம் நகர் விட்டு நகர்

 

மீண்டும் சென்னையில் வெள்ளம் மீளுமா  நகரம் ???

2015 பிறகு மீண்டும்  அதே டிசம்பர் 4, ஆனால் வருடம் மட்டும் 2023. 

நகரெங்கும் வெள்ளம் , வீடுகளுக்குள் தண்ணீர் , மக்கள் அவதி, பொருட்கள் சேதாரங்கள் , பாதித்த  வாழ்வாதாரங்கள், சலிப்புடன் மீண்டும்  தொடரும்  நெருக்கடி மிகு நகர வாழ்க்கை.

மூன்று மாதத்தில் பெய்ய  வேண்டிய  மழை மூன்று நாட்களுக்குள் பெய்கிறது.

புதிய தலைமுறை தொ.கா. காணொளி லிங்க் https://youtu.be/SU8ACs-pfBU?si=QX24D28a_K24ofLj

நம்மாழ்வார் அய்யா  அன்றே  சொன்னார்.

"இனி புயல் மழை  தான் பருவ மழை கிடையாது" என்று. 

புயல் மழையை தவிர்ப்பது எப்படி ??

தமிழரின் வாழ்வியல் முறைப்படி வந்த சொலவடை "மாதம்  மும்மாரி மழை ". ஆனால் இன்று  மாதம்  மும்மாரி பெய்கிறதா ??? இல்லை .

ஏன் பெய்வதில்லை ?? 

பருவமழை பெய்ய  அடிப்படை தேவை நாட்டில்  உள்ள மலைகள்  அனைத்திலும் அடர்ந்த மரங்கள் மூடிய புற்களை கொண்ட  அடர்வனம். 

ஒவ்வொரு மரமும் தனது இலைகளில் பல இலட்சம்  லிட்டர்  தண்ணீராய் சேமிக்கிறது . அடர்ந்த மரங்களால்  பூமியில்  இருக்கும்  தண்ணீர்  ஆவியாவது தடுக்கப்பட்டு மலைகளை  குளுமையாக வைத்திருக்க  உதவுகிறது .  குளிர்ந்த மலைகளில் மட்டுமே நீராவியான மேகம் மீண்டும் மழையாக இறங்கி ஆறாகும்.

 இலைகளில்  இருக்கும்  நீர் மட்டும்  ஆவியாகி  மேகமாகிறது. அதிலிருந்து காய்ந்து விழும்  இலைகள் மலைக்கு மூடாக்காகி உரமாகி மண்  வளம் காக்கிறது . 

ஆனால் இன்று பெரும்பாலான மலைகளில் உயரமான மரங்கள் வெட்டப்பட்டு, கட்டிடங்கள் கட்டப்பட்டு அல்லது  நாலடி உயரமே உள்ள தேயிலை தோட்டங்கள் வளர்க்கப்படுவதால் மலைகளில் வெப்பம் அதிகரிக்கிறது. இதனால் மேகங்கள் கீழே இறங்க முடியாமல் மேலும் உயருவதால் மழை பெய்யாமல் போய் விடுகிறது. இதனால் மாதா மாதம் அளவோடு பெய்ய வேண்டிய மழை மேகங்கள் பெய்ய வாய்ப்பில்லாததால் மேலும் ஆவியாகி  ஒரு கட்டத்தில் பூமியின் மேல் புறத்தில் வெப்பம் மிகுந்து காற்றின் அழுத்தத்தில் மாறுபாடு வந்த பின் இது நாள் வரை மேலடுக்கில் சுழன்று கொண்டே இருந்த மேகங்கள் அனைத்தும் மேகக் கூட்டங்களாக மாறி ஒரே நேரத்தில் பூமியை குளிர்விக்க அதிவேகத்தில் புயலாக தரையிறங்கி அதி வேக வெள்ளமாக ஊரெங்கும் ஓடுகின்றது.

இதே மாதா மாதம் அளவோடு பெய்திருந்தால் மழை நீரை அனைத்து ஏரி , குளங்கிலும் நிரப்ப முடியும். ஆனால் புயல் வெள்ளமாக சில நாட்களில் தரை இறங்குவதால் நீரை சேமிக்கவும் முடியாமல் சென்னை போன்ற நீர் நிலை ஆக்கிரமிக்கப்பட்ட நகரங்களில் வீடுகளுக்கு உள்ளும் புகுந்து ஊரையே புரட்டிப் போட்டுவிட்டு செல்கிறது.

இதற்கு தமிழ் நாட்டில் உள்ள இரண்டு மலை தொடர்கள் கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள் அனைத்திலும் அடர்வன காடுகள் உருவாக்குவதே தமிழகத்தில் புயல் வருவதை குறைக்க உதவும். 

நகர  கிராம மக்கள் அடர்த்தி

இதுவும் தவிர வெள்ளத்தின் தாக்கத்தை குறைக்க மக்கள் அடர்த்தியை மாநிலம் முழுக்க பரவலாக்க வேண்டும்.  தமிழகத்தின் தலை நகரமான சென்னை மாவட்டம் 900 சதுர கிலோ மீட்டர்களில் ஒரு கோடி மக்கள் தொகையை தாண்டி வருகிறது ஆனால் அருகில் இருக்கும் மாநிலத்தின் இரண்டாவது பெரிய மாவட்டமான திருவண்ணாமலை 4500 சதுர கிலோ மீட்டர்களில் 30 இலட்சம் மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். 



விவசாய வாழ்க்கைக்கு அதிக வருமானம்

விவசாயமே பிரதானமாக உள்ள இத்தகைய மாவட்டங்களில் விவசாய பொருட்கள் மதிப்பு கூட்டப்படக் கூடிய வாய்ப்புகளை அதிகரித்து கிராமத்திலேயே வருமானம் கிடைக்கக் கூடிய வாய்ப்பை கூட்டினால் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடி பெறுதல் குறையும்.

நகர சுமை வரி = கிராம வருமான மேம்பாடு

வெள்ள நிவாரணத்திற்கு பணம் செலவிடுதலை காட்டிலும் கிராமங்களில் உற்பத்தியாகும் அனைத்து பொருட்களுக்கும் அதிக மதிப்பு கொடுத்தால் நகரங்களின் சுமை குறையும். நகரங்களை பராமரிக்க அரசாங்கங்கள் அதிகம் செலவு செய்கின்றன ஆனால் தீர்க்கதரிசனமான சிந்தனை இருந்தால் கிராமங்களில் வாழ மக்களை ஊக்குவிக்க வேண்டும்.  அனைத்து வகையான பயிர்களுக்கும் - தானியங்கள், காய்கறிகள், பழ வகைகள் அனைத்திற்கும் குறைந்தபட்ச விலை அரசு நிர்ணயிக்க வேண்டும். 

இன்று பெரும்பாலான கிராமங்களில் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் உடல், மன நலம் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் உள்ளனர். அதிலும் நச்சுமிகு இரசாயன் உரங்கள் இட்டு அவர்களும் பலவீனமாக உள்ளனர். இருப்பவர்கள் சிலருக்கும் நூறு நாள் வேலை திட்டமும் ரேசனில் கிடைக்கும் தரம் & அளவு குறைந்த பொருட்களுமே வாழ்வாதாரமாக உள்ளது.  இந்த சூழ்நிலை மாறி கிராமத்தில் தரமான வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் கிடைக்க வழி கிடைத்தால் கிராமத்தை விட்டு நகரத்திற்கு இடம் பெயர்தல் குறையும். கிராம, நகர மக்கள் வாழ்க்கை தரம் உயர்ந்தால் நகரத்தில் இட நெருக்கடி குறையும்.

இது போன்ற வெள்ளத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளும் குறையும்.

விவசாயம், விவசாய சார்ந்த தொழில்களை தொழிற்சாலைகளாக கருத வேண்டும்.

நமது நாட்டில் விவசாயத்தை ஒரு சுமையாகவும் விளை நிலங்களை குறைவான உற்பத்தி திறனாக கருதப்பட்டு விவசாயத்திற்கு மாற்றாக தொழிற்சாலைகள் அமைப்பதையே அரசாங்கங்கள் விரும்புகின்றன.

 விவசாயத்திற்கு மிகவும் உகந்த பருவநிலையை கொண்ட நாடு இந்தியா அதிலும் தமிழ்நாட்டில் 11 மாதங்கள் நல்ல வெயில் இருக்கும் ஒரு மாநிலம். அதனால் நமது பலத்திற்கு ஏற்றாற் போல் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுத்து அதுவும் விவசாயிகளின் கூட்டுறவில் பல சிறு தொழிற்சாலைகளாக போனால் திருவண்ணாமலை போன்ற கனரக தொழிற்சாலைகளே இல்லாத மாவட்டத்தில் கூட கிராமிய தொழில்கள் அதிக அளவில் ஊக்குவித்தாலே நகரத்திற்கு அதிக மக்களை அனுப்பும் இது போன்ற மாவட்ட மக்கள் கிராமங்களில் நிரந்தரமாக இருப்பார்கள்.

ஊழல் மனநிலை - தேவை மனமாற்றம் 

தமிழ்நாட்டில் ஊழல் செயவது அன்றாட வாழ்வில் இரண்டற கலந்துவிட்டது. இதனால் எந்த ஒரு தொழிலிலும் நீண்ட கால தொலை நோக்கு இல்லாமல் இன்று இந்த வேலையில் எவ்வளவு முறையற்ற முறையில் பணம் சேர்ப்பது என்பதே அடிப்படை தகுதியாகி அடியாட்கள் பலம் மட்டுமே அரசியல் அதிகாரங்களுக்கு அடிப்படை தகுதியாகிவிட்டது.  மக்கள் எந்த ஒரு வேலைக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்து வாங்கி / கொடுத்து பழக்கப்பட்டுவிட்டனர். 5 வருடங்களுக்கு ஒரு முறை போடும் ஓட்டிற்கும் ஒரு விலை வைத்து இன்று அனைத்து துறைகளிலும் ஊழல் நீக்கமற நிறைந்துவிட்டது.  இதனால் நகரங்களில் , கிராமங்களில் நடக்கும் பல வேலைகளிலும் குறைவான தரத்திலே செய்யப்பட்டுள்ளதால் சிறிய இயற்கை சீற்றங்கள் கூட பேரிடர்களாகி விடுகின்றன.  குடிமக்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தி வாழ பழக வேண்டும்,  நாம் நமது எதிர்கால சந்ததியினருக்கும் ஒரு பொறுப்புள்ள சமுதாயத்தை விட்டு சென்றால் தான் அவர்களால் இங்கு வாழவே முடியும்.

பருவநிலை மாற்றங்களுக்கு நகரங்களே அதிக காரணமாகின்றன. கரோனா போன்ற பெருந்தொற்றுகளிலும் நகரங்களே அதிகம் பாதிப்புகுள்ளாகின்றன. 2005, 2015, 2023 சென்னை வெள்ளங்கள் மூலமாக இயற்கை நமக்கு சொல்லும் செய்தி - நகர் விட்டு நகர், கிராமம் புகு என்பதேயாகும். 


பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் டிசம்பர் 2023

Responsible Citizens iYakkam December 2023

#

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Excellent Explanation. Will the greedy people, Real estate Mafia will change ?

    ReplyDelete
    Replies
    1. Situation forces the citizens to think and act about it quickly

      Delete

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society